DISCUSSIONS

இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் தொழில்/வியாபாரத்தில் செய்த முதலீடு, வங்கிக் கடன் ஆகியவற்றை சமாளிக்க வேண்டி ஒரு சேர கருத்தில் இருத்தி வைத்து பார்த்தால், அதற்குரிய சூத்திரம்....... “அதிக உழைப்பு = கூடுதல் வியாபாரம் = உரிய லாபம் = முதலீட்டிற்கான வங்கி கடன் செலுத்த தவறாமை = வேலைவாய்ப்பு + தனி மனித பொருளாதார மேம்பாடு” என்பதாகும். ஆக சொந்த தொழில்/வியாபாரம் நடத்துபவர்களுக்கு தற்சமயத் தேவை “கூடுதல் வியாபாரம்” என்பது தெளிவாக புரிய வரும். இவ்வாறு இருக்கையில் இரவு 11.30 மணியிலிருந்து விரட்ட ஆரம்பித்து 12.30 மணிக்குள் தொழில்/வியாபார நிறுவனங்களை முழுவதுமாக மூடி விட காவல்துறை நிர்பந்திப்பது ஏன்? எதனால்? என்பதை பார்பதற்கு முன்பு எல்லாத் தரப்பு தொழில்/வியாபார முதலீட்டாளர்களின் நிலை என்ன? என்பதை சற்றே பார்த்தால் மிக தெளிவாக புரிய வருவது என்னவென்றால், அது, ஒரு தொழில்/வியாபார நிறுவனத்தை அதன் முதலீட்டாளர் சட்டத்திற்கு உட்பட்ட தொழில்/வியாபாரம் செய்வதற்கு அவர் தேர்ந்தெடுக்கும் நேர சுதந்திரம் என்பது தான், அது இருக்கும்பட்சத்தில், “முதல் போட்டவனுக்கு தெரியும் அருமை தடுப்பவனுக்கு தெரியாது”, என்ற ஆதங்கம். முதல் போட்டவர் தன் செளகரியப்படியான நேரம்/நாட்களில் தொழில்/வியாபார நிறுவனத்தை நடத்திட முடிந்தால் மட்டுமே அவரால் முதலீட்டை லாபகரமாக திரும்ப பெறமுடியும், அதைத்தான் சூத்திரம் மூலம் விளக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலைகளில் தொழில்/வியாபார நிறுவனத்தை காலை 08.00 மணிக்கு ஆரம்பித்து இரவு 12.00 மணிக்குள் முடிக்க வேண்டும், ஞாயிறு/அரசு விடுமுறைகள் கண்டிப்பாக தொழில்/வியாபார நிறுவனத்தை மூட வேண்டும் என்ற நிர்பந்தங்களை ஏற்படுத்தியதின் விளைவு யாதெனில், 1. முதலீட்டிற்கான வங்கி வட்டி கூட கட்ட முடியாமல் தவிப்பு 2. இரவில் அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் போனது. 3. தம் குடும்பத்திற்காக உழைக்க தயாராக இருந்தும் நேரக்கட்டுப்பாட்டால் அவதியுறும் தொழில்/வியாபார முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலாளர்கள். 4. அரசிற்கு நேரடி/மறைமுக வருமான இழப்பு. 5. தனிமனித பொருளாதார பின்னடைவு. இச்சூழ்நிலைகளில் நேரக் கட்டுப்பாட்டை விதித்தது யார்? எதன் அடிப்படையில் விதித்தார்கள்? தமிழ்நாடு கடைகள் மற்றும் ஸ்தாபனச் சட்டங்கள் 1947- பிரிவு 7-ன் படி, மாநில அரசு அவ்வப்போது கடைகளின் வேலை நேரத்தை நிர்ணயிக்கும், இதன் அடிப்படையில் தான் காவல்துறை தனக்கிடப்பட்ட அரசு உத்தரவின் பேரில் மட்டுமே, கடைகளை இரவு 11.30லிருந்து 12.30க்குள் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதாவது, தற்சமயம் மாநில அரசால் இயற்றப்பட்ட விதியின் படி காலை முதல் இரவு 12 மணி வரை கடைகள் இயங்க வேண்டியது என்றும், அதன் பின்னர் கடைகள்/ஸ்தாபனங்கள் கண்டிப்பான முறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் அதனை காவல்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகளும் சரி, பொது மக்களும் சரி பெருமளவில் பாதிக்கப்பட்டு வந்தனர் என்பது நிதர்சனமான உண்மை. உதாரணமாக, பெருகிவரும் தொழிற்சாலைகள் மற்றும் தொழிலகங்கள் ஷிப்ட் (Shift) முறையில் இயங்கி வரும் வேளையில், வேலை முடித்து வரும் பொழுது பசிக்கு உணவோ அல்லது டீக்கடைகளோ இல்லாமல் இருப்பதும், வெளியூர் பயணங்களை மேற்கொண்டு திரும்புவர்கள் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் இருப்பதும், நோயாளிகள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் இரவு நேர அத்தியாவசிய தேவைக்கு அலைவதும், , விஷேச நாட்களிலோ அல்லது துக்கத்திருப்பவர்கள் தேவைக்கு கூட “இரவு பாலைவனமாக” பெரு நகரங்களும் சரி, நகரங்களும் சரி, கிராமங்களும் சரி மாறிவிடுவது சம்பந்தப்பட்டவர்களின் வேதனைகளை நாம் மறக்க முடியாது. மேற்சொன்ன நேர வரையரை காரணத்தினால் இரவில் போக்குவரத்து இல்லாமல் பொதுமக்கள் நடமாற்றம் இன்றி இருக்கும் இருட்டு பகுதிகளில் சமூக விரோத செயல்கள் அங்காங்கே நடப்பது காவல்துறைக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இரவு முழுவதும் மக்கள் நடமாட்டம், வியாபாரங்கள் தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தால், கடை நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் வெளிச்சம் முதலியவற்றால் வெறுமை/இருள் அகன்று சமூக விரோத செயல்கள் நடப்பது குறையும். சிறு, குறு வியாபாரிகளின் கேள்வி என்னவென்றால், நாட்டு பிரஜையான எங்களுக்கு, நாட்டின் எல்லைக்குள் சட்டப்படியான வியாபாரத்தை மேற்கொள்ள எங்களுக்கு நேரக்கட்டுப்பாடோ அல்லது உழைக்க கட்டுப்பாடோ சட்டத்தால் விதிக்க முடியுமா என்றும், அவ்வாறு விதிக்கப்பட்ட சட்டங்களின் நிலை என்ன என்பதாகும். இந்திய அரசியலமைப்பு சாசன சட்டம் உறுப்பு 19 (6)-ல் “எந்த ஒரு சட்ட ரீதியான தொழிலையும் செய்ய, அல்லது எந்த ஒரு வேலை, வாணியம், வணிகம் நடத்துவதற்கான உரிமை” பற்றி மிக தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. மேற்படி உரிமையானது அடிப்படை உரிமையாக ஒரு குடிமகனுக்கு இந்நாட்டில் வழங்குவதற்கான உத்தரவாதமாகும், இருந்தாலும் தக்க காரணங்களின் அடிப்படையில், அதாவது, பொது அமைதி, ஒழுக்க பண்பு, ஒழுக்க நெறி போன்ற குறிப்பிட்ட வரையறைகளை கொண்டு அமைந்ததாகும், இதை தவிர எந்தவித காரணமற்ற வரையறைகளை ஏற்படுத்தினால் அது தன்னிச்சையாகவோ அல்லது அதிகப்ட்சமாகவோ ஏற்படுத்தப்பட்ட வரையறையாக கருதப்பட்டு நீதிமன்றங்களால் பல வழக்குகளின் மூலம் சட்டத்திற்கு புறம்பான வரையறைகளை நீக்கி உள்ளது. மேற்படி சட்டத்தின் உறுப்பு 19(1)(2)-ன் படி நாட்டின் நில பகுதியில் எங்கும் சுதந்திரமாக நடமாட வழங்கப்பட்ட உரிமை உத்தரவாதமாகும், இதிலும் பொதுமக்களின் நலன் மற்றும் பலங்குடியினரின் பாதுகாப்பு போன்ற வரையறைகளுடன் கூடியதாகும். இவ்வாறு மேற்சொன்ன இரு உறுப்புகளின் உத்தரவாதத்தின் பேரில் நாட்டின் குடிமக்கள் வாழ்ந்து வரும் வேளையில் அரசின் தனி சட்டங்கள் மூலம் மேற்சொன்ன உத்தரவாதங்களை மீறவோ அல்லது மாற்றி அமைக்கவோ கூடாது, அவ்வாறு எந்த சட்டமும் மீறி இருந்தால் அது நீதிமன்றத்தால் நீக்கப்பட்டு விடும். வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் (பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்த நாடுகளிலும் கூட) 24 மணி நேர கடைகள், வியாபார ஸ்தாபனங்கள் பெரிய தொழில் நிறுவனங்களை போல ஷிப்ட் முறையில் பல ஆண்டுகளாக இயங்கி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடதக்கது, அந்நாட்டு சட்டங்கள், தன்நாட்டின்/ தனிமனிதனின் பொருளாதார சூழ்நிலை மற்றும் மேம்பாடு கருதி அனுமதித்து வருகிறது என்பது ரிதர்சனமான உண்மை. தற்சமயம் நம்நாட்டில் இருக்கும் பொருளாதார பிரச்சனையை பார்க்கும் பொழுது ஒவ்வொரு குடிமகனும் சட்டப்படியான வியாபாரம்/தொழிலை எந்த நேர வரையறையும் இல்லாமல் ஷிப்ட் முறையில் இயங்குவதற்கு அனுமதித்தால் வியாபாரிகளும் சரி, ஷிப்ட் முறையில் இயங்கும் தொழிலாளர்களும் சரி, பொருளாதார வளர்ச்சியை கண்கூடாக காண்பார்கள், அதாவது பகல் பொழுதில் ஒரு தொழிலாளர் ஒரு ஷிப்ட் வேலை பார்த்தால் இரண்டாவது ஷிப்ட்டை பார்ப்பதற்கு மற்றொரு தொழிலாளிக்கு வேலை வாய்ப்பு உருவாகும், கூடுதல் நேரம் வியாபாரம்/தொழில் நடக்கும் பொழுது வியாபாரிகளின் வியாபாரம் கூடும், இது ஒரு தொடர் சங்கிலி பொருளாதார மேம்பாடாகும். இதை உணர்ந்த பன்முகம் கொண்ட நாடுகளும் சரி, கட்டுப்பாடு மிகுந்த நாடுகளிலும் சரி 24 மணிநேர வர்த்தகம் நடைபெறுகிறது, அதனால் அந்நாட்டு மக்களின் வாழ்வியல் உயர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இன்றும் உழைக்க தயங்காத நம் மக்கள் பல நாடுகளில் அல்லும் பகலும் உழைப்பை காட்டி தம் குடும்பத்திற்கு பொருள் சேகரிக்கிறார்கள், அவர்கள் காலவரையறை நேர கட்டுப்பாட்டை அவர்கள் விரும்பவில்லை, உழைக்க தயாராக இருக்கிறோம், உழைக்கிறோம் அதற்கான பொருளாதாரத்தை பெறுகிறோம் என்கிறார்கள், தனிமனித/குடும்ப பொருளாதாரம் மேம்படுகிறது இதற்கு எதற்கு காலவரையறை என்று நம் இளைஞர்களின் கேள்வி தற்சமயம் அதிகம் ஒலிக்கிறது. மனிதவள மேம்பாட்டுத்துறை இதனை கருத்தில் கொண்டிருக்க வேண்டும், அவ்வாறு ஒரு வேளை வியாபார/தொழில் ஸ்தாபனங்களின் காலவரையறையை மனிதவள மேம்பாடுத்துறை 24 மணிநேரமாக முன்னமே மாற்றி இருந்தால், வெளிநாடுகளில் தன் குடும்பத்தை பிரிந்து தனியாக அந்நாட்டின் வளர்ச்சிக்கும், தனக்கும் உழைத்து வருமானம் ஈட்டி வரும் நம்மக்கள் உள்நாட்டிலேயே தனக்காகவும், தன் தாய் நாட்டிற்காகவும் உழைத்து அந்த பொருளாதாரத்தை இங்கேயே பெற்றிருப்பார்கள் என ஆட்சியாளர்கள் உரிய காலத்தில் உணர தவறியது துரதிஷ்டவசமானது. தொன்மையும், பாரம்பரியமும் மிக்க மதுரையின் சிறப்பே அல்லும், பகலுமான வியாபாரமாகும், இச்சிறப்பு காரணமாகவே இவ் ஊருக்கு மற்றொரு பெயர் “தூங்காநகரம்”, இச்சிறப்பு ஏதோ சில நூற்றாண்டுகளாக தான் இருந்து வருகின்றது என்றால், அதான் இல்லை, இச்சிறப்பு இறைவனும், இறைவியும் இப்பூமியில் (மதுரையில்) நடத்திய திருவிளையாடல் புராணமே சாட்சி, மேலும் மன்னர்களின் காலத்திலும் கூட முகலாய மன்னர்கள் படையெடுப்பிலும் மதுரையின் இரவு பகலாக செயல்பட்ட வியாபார ஸ்தலங்களே படையெடுப்பின் இரண்டாவது முக்கிய காரணமாக அமைந்ததாக வரலாற்றாலர்கள் கூறுகிறார்கள். மதுரையின் 24 மணி நேர வியாபார மாண்பினை இந்த யுகத்தில், தொல்காப்பியத்தின் மணிமகுடமாக அமைந்த மதுரைக்காண்டத்தில் “நாளங்காடி-அல்லங்காடி” பற்றி வெகுவாக சொல்லப்பட்டுள்ளது. அன்றைய ஆட்சியாளர்களுக்கு மிக நன்கு அறிந்த சூத்திரம் “வியாபரம் இல்லையேல் வரி வருமானம் இல்லை, வரி வருமானம் இல்லையேல் நாட்டில் வளர்ச்சி இல்லை” என்பதே ஆகும். ஒரு நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிப்பது வரி வருமானம் ஆகும், இதையே பல அரசியலியல் அறிஞர்களான அரிஸ்டாட்டில், மேக்கியவல்லி, ரூசோ, சால்மண்ட், பிளாட்டோ, காரல்மார்க்ஸ், போலிபயஸ், சிசரோ, ஹியூம், மோண்டஸ்கி, எட்மண்ட் பர்க், தாமஸ் ஹோப்ஸ், கெளடில்யர் போன்றோர்களின் தத்துவமும் “வரி வருமானத்தில் மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சியை அதிக அளவு காணமுடியும்” என்று சொல்லப்பட்டுள்ளது. எனவேதான் அரசின் வருமானத்தை (வரியை) அதிகப்படுத்த வேண்டுமெனில் வியாபாரத்தை மற்றும் வியாபார நேரங்களை அதிகப்படுத்தினால் தான் அதிக வரி கிடைக்கும் என்பது கண்கூடாக நம் முன்னோர்கள் அறிந்திருந்து அதை செயல்படுத்தினார்கள் என்பது மிக தெளிவாக தெரியவருகிறது. முன்னோர்களின் வழியை சிறிது காலம் அரசுகளும், ஆட்சிகளும் மறந்திருந்து அனுபவமற்ற அணுகுமுறையால் வியாபார ஸ்தாபனங்களின்/கடைகளின் வேலை நேரத்தை குறைத்து அதனை சட்டமாக 1947-ல் கொணர்ந்து, அதன் பின் கால இடைவெளியில் அதே அனுபவமற்ற அறிவிப்புகளின் பெயரில் வேலை நேரத்தை குறைத்து தன் வரி வருமானத்தையும் அறியாமலேயே குறைத்துக் கொண்டார்கள். இது மதுரைக்கு மட்டுமல்லாது நம் நாட்டில் உள்ள இதர பகுதிகளுக்கும் பொருந்தும். இவ்வேளையில் மத்திய அரசு, உலக நாடுகளின் 24 மணிநேர கடை/வியாபார ஸ்தாபனங்களின் சட்டங்களை ஆராய்ந்து, தற்சமயம் புதிய கடைகள் மற்றும் ஸ்தாபனங்கள் (வேலை ஒழுங்குமுறை மற்றும் நிபந்தனைகள்) சட்டம் 2016-ன் வரைவினை பாராளுமன்றத்தில் வைத்தது, அதனை சிறு திருத்தங்கள் மூலமாக ஏற்றுக்கொள்வதாக அனைத்து மாநில மக்கள் பிரதிநிதிகளும் ஏகோபித்த குரலில் ஒத்துக் கொண்டுள்ளார்கள், அதாவது மேற்படி சட்ட வரைவில் “அனைத்து கடைகள் மற்றும் ஸ்தாபனங்கள், (பேக்டரி சட்டங்களுக்கு உட்படாத) மால்கள், சினிமா தியேட்டர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 24X7 நேரத்திலும் வருடத்தில் 365 நாட்களும் இயங்கலாம் எனவும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இது சம்மந்தமான அறிக்கைகள்/திருத்தங்கள் செய்துக்கொள்ள வழிவகுத்துள்ளது” என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேலையாட்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேற்படி சட்டத்தில் இன பாகுப்பாடு இல்லாமலும், போக்குவரத்து, குழந்தைகள் காப்பகம், பாலினத்திற்கான தனித்தனி ஓய்வறைகள் மற்றும் கழிப்பிடங்கள் வழங்கிடவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி புதியச் சட்டத்தில் ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு 12 நாட்கள் கட்டாய விடுப்பு, சம்பளத்துடன் கூடிய திருவிழா ஐந்து விடுப்புகள், ஷிப்டு ஒன்றுக்கு 9 மணிநேர வேலை (அரைமணி நேர கட்டாய ஓய்வுடன்), முதலிய சாரம்சங்கள் அடங்கியுள்ளது. மேற்படி புதிய சட்டத்தை தெலுங்கான, உ.பி., ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்கள் உடனடியாக செயல்படுத்த முன்வந்துள்ளது, ஆந்திரா, மகாராஷ்ட்ரா, கர்நாடக மாநிலங்கள் ஏற்கனவே சட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு திருத்தம் செய்து கொண்டு நடைமுறையில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதலீட்டாளர்களும் சரி, தொழிலாளர்களும் சரி, நுகர்வோர்களும் சரி முழுமையாக மேற்படி புதியச்சட்டத்தின் மூலமாக நேரடியாக பயனடைவார்கள், என்று வர்த்தக சங்கங்களும் வரவேற்றுள்ளார்கள். இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி காணும் என்பது ஐயமில்லை. இதில் துரதிரிஷ்டவசமான விஷயம் என்னவென்றால், நம்மாநிலத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளோ, அரசு அதிகாரிகளோ, ஆட்சியாளர்களோ ஒருவர் கூட மேற்படி புதியச் சட்டத்தினை நம்மாநிலத்தில் நடைமுறைபடுத்த முயற்சி எடுக்கப்படவில்லை அல்லது விவாதத்திற்கு கூட எடுத்துக் கொள்ளவில்லை என்பது தான். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வித வியாபாரம்/தொழில் அதன் கலாச்சாரம்/மரபு/பண்பினை ஒத்திருக்கும் என்பது மனித இன ஆராய்ச்சியாளர்களின் கருத்தாகும், அதனடிப்படையில் மதுரைக்கு உள்ள சிறப்பு “வந்தாரை வாழ வைக்கும் ஊரு”, அதாவது “விருந்தோம்பல்” என்பதாகும். இன்னும் சொல்லப்போனால் இது ஒரு சுற்றுலா ஸ்தலங்களின் மையமாகும், எனவே இதை ஒட்டிய அனைத்து வித வியாபாரங்களும் செழிப்பாகும், யாத்திரீகர்கள் தங்குவதற்கும், உண்பதற்கும் பொருட்களை வாங்குவதற்கும், போக்குவரத்திற்கும், கலை நுட்பங்களை கண்டுகழிப்பதற்கும் இரவு, பகல் பாராது காலநேரத்தை வீணடிக்காமல் சுற்றிவர விரும்புவார்கள், மேலும் மதுரையின் சிறப்பான “விருந்தோம்பல்” மூலம் பிற மாவட்டத்தார்கள், பிற மாநிலத்தார்கள், பிற நாட்டவர்கள் கவரப்படுவார்கள் என்பது திண்ணம். மேலே சொல்லபட்ட சூத்திரப்படி வியாபாரம் கூடினால் வரி வருமானம் கூடும், வரி வருமானம் கூடினால் அரசிற்க்கு வருமானம், அரசின் வருமானம் நலத்திட்டங்கள் வாயிலாக மக்களுக்கு பல்வேறு வசதிகளும் அதன் மூலம் பல்வேறு வாய்ப்புகளும் உருவாகும். எனவே கடைகள், வியாபார ஸ்தாபனங்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டமைப்புகளின் மூலமாகவோ மேற்படி புதியச் சட்ட வரைவினை நம்மாநிலத்தில் அமல்படுத்திட கேட்கலாம், செவிசாய்க்காதப்பட்சத்தில், அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகிறது என்ற கோணத்தில் உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்காக கொணர்ந்து இழந்த மதுரையின் மாண்பினை மீட்டிடலாம், நம் மக்கள் வளமாகவும், நலமாகவும் வாழலாம். // சர்வம் சத்குரு பாதுகார்பணம் //

Disclaimer

Indian Law firms, are restricted by law and the Bar Council of India regulations from providing information about the firm, and its clients. Information regarding the firm and its professionals can be obtained by contacting us at the above address.

Office @ Chennai

M/S. VS. KARTHI ASSOCIATES,
Regd. Law Firm,
No. 32-A, Krishna Street,
T.Nagar, Chennai - 600 016.

  Mobile:+91 94444 53882
Email: vskarthiassociates@gmail.com
Website: www.vskarthiassociates.in

Office @ Madurai

M/S. VS. KARTHI ASSOCIATES,
Regd. Law Firm,
No. 232, 2nd floor, above HDFC Bank,
Vetrilai Pettai, East Veli Street,
Madurai-625001.

  Mobile:+91 94444 53882
Telephone:+91 452 498 5286
Email: vskarthiassociates@gmail.com
Website: www.vskarthiassociates.in